Description
சுந்தர ராமசாமியின் படைப்பு ஆளுமையின் முக்கியமான பல கூறுகளை அவரது சிறுகதைகளிலேயே தெளிவாக அடையாளம் காணமுடிகிறது. சு.ரா.வின் சிறுகதைகள் வாசிப்பை ஓர் இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் தீவிரமான அனுபவத்தின் தொந்தரவுக்கும் நம்மை உள்ளாக்குகின்றன. செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவுகொள்ளும் சுகத்தை அளிக்கும்போதே உக்கிரமான தேடலின் கனத்தையும் நம் மீது சரியச் செய்துவிடுகின்றன. மனிததுக்கத்தையும் அவலங்களையும் மட்டுமன்றி நெகிழ்வையும் விகாசத்தையும் பதிவுசெய்கின்றன. வாழ்வுக்கும் நமக்கும், காலத்திற்கும் நமக்கும், மொழிக்கும் நமக்கும் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன. பின்னுரையில் அரவிந்தன்
About the Author
சுந்தர ராமசாமி (1931 – 2005) தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும் ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் ‘தோட்டி யின் மக’னைத் தமிழில் மொழிபெயர்த்ததே முதல் இலக்கியப் பணி. 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான ‘முதலும் முடிவும்’ அதில் இடம் பெற்றது. மூன்று நாவல்களும் பல கட்டுரைகளும் சுமார் 60 சிறுகதைகளும், பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதினார். 1988இல் காலச்சுவடு இதழை நிறுவினார். சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ (கனடா) பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான ‘இயல்’ விருதை (2001) வழங்கியது. வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் ‘கதா சூடாமணி’ விருதையும் (2003) பெற்றார். சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று அமெரிக்காவில் காலமானார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.