பறம்பு மலையையும் தன் குடிகளையும் நேசித்தும் சுவாசித்தும் ஆட்சி செய்து பாதுகாத்துக்கொண்டிருந்தவன் குறுநில மன்னன் பாரி. அவன், வேளிர்குலத் தலைவனானதால் வேள்பாரி. சங்ககால வள்ளல்கள் மற்றெவரையும்விட சிறந்த வள்ளல் தன்மை கொண்டவன் பாரி என தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் பாடிப் போற்றினர். பாரியின் புகழ் மீது பொறாமை கொண்டும் பறம்பு மலையின் அரிய பெரிய பொருள்களின் மீது ஆசை கொண்டும் – சேரனும் சோழனும் வெவ்வேறு காலகட்டத்தில் தனித்தனியே போர் தொடுத்து பாரியிடம் தோற்றுப் போகின்றனர். பிறகு சேர, சோழ, பாண்டியர் என மூன்று பெருவேந்தர்களும் ஒன்றாகச் சேர்ந்து பாரியை அழித்தொழிக்க பறம்பின் மீது முற்றுகையிடுகிறார்கள். ஆனால், பாரியின் பறம்பு மலையைக்கூட வெல்ல முடியாமல் போராடிய மூவேந்தர்களின் பெரும் படைகளை, அளப்பரிய தன் வீரத்தாலும் போர் வியூகங்களாலும் முழு முற்றாக அழித்தொழிக்கிறான் வேள்பாரி. அப்படிப்பட்ட பாரியின் வரலாற்றுடன் வெகு நயமான புனைவுகளையும் பாத்திரப் படைப்புகளையும் இணைத்து தன் வசீகர எழுத்தால் பாரியின்பால் இழுத்து வாசிப்பவர்களை வியப்புக்குள்ளாக்கியிருக்கிறார், எழுத்தாளர் சு.வெங்கடேசன். எல்லாம் இணையமயமாகிவிட்ட இந்தக் காலகட்டத்திலும் தமிழ் வார இதழ் தொடர்களில் 100 வாரங்களுக்கு மேல் ஒரு வரலாற்றுத் தொடர் எழுதப்பட்டதென்பதில் இருந்தே வீரயுக நாயகன் வேள்பாரி தொடரை வாசகர்கள் எப்படி நேசித்து வரவேற்றார்கள் என்பது புரியும். ஆம், ஆனந்த விகடனில் 111 வாரங்களாக, பாரியை வாரி அணைத்து வரவேற்றார்கள் வாசகர்கள். இப்போது அழகிய இரண்டு தொகுதிகளாக உங்கள் கைகளில் விரியப்போகிறது பாரியின் வரலாறு. `முல்லைக்குத் தேர் தந்தவன் பாரி’ என நாம் அறிந்த ஒற்றை வரி நாயகன் பாரியின் இணையற்ற வீரத்தையும் சுனை நீரினை விஞ்சும் அவன் ஈர நெஞ்சையும் அறிய, பாரியோடு பறம்பு நாடெங்கும் பயணிக்கலாம்!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.