இமயமலை இந்தியாவின் மணிமுடி. கன்யாகுமரி முதல் விரிந்திருக்கும் இப்பெருநிலத்திலிருந்து ஒவ்வொரு தலைமுறையிலும் லட்சக்கணக்கானவர்கள் இமயமலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். சுற்றுலாப்பயணிகளாக செல்பவர்கள் உண்டு, துறவிகளாகி ஞானம் தேடி செல்பவர்களும் உண்டு.
இமயமலை இன்று வரைக்கும் மனிதனால் பார்க்கப்படாத ஒரு நிலம் என்றால் அது மிகையல்ல. அதிலுள்ள மலைச்சிகரங்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான இடங்களிலேயே மனிதர்கள் இதுவரைக்கும் சென்றிருக்கிறார்கள். தொண்ணூறு சதவீத சிகரங்களுக்கும் பெயர்கள் கிடையாது. மிக அண்மைக்காலத்தில் தான் எண்கள் போடப்பட்டிருக்கின்றன. நம் நாட்டிலேயே இருக்கும் ஒரு மாபெரும் நிலப்பரப்பு நமக்கு முற்றிலும் தெரியாத ஒன்றாக உள்ளது.
இமயமலையின் அளவும் மிகப்பிரமாண்டமானது. மேற்கே காரகோரம் முதல் கிழக்கே பர்மா எல்லை வரைக்குமான இமயமலையின் நிலப்பகுதி இந்தியாவைவிட அதிகமானது. அதுவே ஒரு தனிநாடு என்று சொல்லத்தக்கது அங்குள்ள மக்கள் தொகை என்பது மிகக்குறைவு. மிகப்பெரும்பாலும் மனித சஞ்சாரமற்ற இடமாக உள்ளது. இந்த மர்மம் தான் ஒவ்வொருவரையும் அங்கே செல்லவைக்கிறது. அந்த மர்மத்தை குழந்தைகளுக்காக விரித்து எழுதும் முயற்சியில் இந்த நாவல் வெற்றி பெற்றுள்ளது.
வெள்ளிநிலம் இமயமலையின் கதை கூடவே மதம் என்னும் அமைப்பு மனிதகுலத்தில் எப்படி உருவாகியது எப்படி வளர்ந்தது என்று காட்டுகிறது. மதத்தின் ஆன்மிகமான தேவை என்ன, இலக்கியம் சார்ந்த தேவை என்ன, அதிலுள்ள குறைபாடுகள் என்ன என்று விவாதிக்கிறது. ஆனால் ஒரு பரபரப்பான சாகச நாவலாகவும் ஐந்தாம் வகுப்புக்கு மேற்பட்ட ஒரு குழந்தை மிக எளிதில் வாசித்துச்செல்லும் மொழிநடை கொண்டதாகவும் இது உள்ளது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.