Description
‘சபால்டர்ன் ஆய்வுகள்’ (Subaltern Studies) என அறியப்படும் கருத்தாக்கத்தை முன்வைத்த ரணஜித் குஹா தனது நூறாவது வயதை நெருங்கிய நிலையில் சமீபத்தில் மரணம் அடைந்தார். சாதி, மதம், வகுப்பு, தீண்டாமை, இனக்குழு (Tribe) முதலான அடிப்படைகளில் ஒரு சாராரை, ஏதோ ஒரு வகையில் வேறுபட்டவர்களாகவும், ஒப்பீட்டளவில் கீழ்நிலையில் இருப்பவர்களாகவும் அணுகும் போக்குதான் ‘சபால்டர்ன் அணுகல்முறை’ அல்லது ‘விளிம்புநிலை ஆய்வுகள்’ எனப்படுகிறது. இதனூடாக இம்மக்களின் வாழ்க்கை அமைவு, தம் மீது சுமத்தப்பட்ட இந்த ‘சபால்டர்ன்’ எனும் அடையாளத்தை அவர்கள் எதிர்கொண்டமை ஆகியவை குறித்த ஆய்வாகவே சபால்டர்ன் ஆய்வுகள் அணுகப்பட்டன. பெரிய அளவில் ஒரு விவசாயச் சமூகமாக உருப்பெற்றிருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் காலனியம் மற்றும் அதற்குப் பிந்திய காலங்களில், இந்தப் பிரச்சினையை சபால்டர்ன் மக்கள் எதிர்கொண்ட தன்மைகள், வடிவங்கள் ஆகியன கவனத்துக்குரியவை ஆயின. இதை ஒட்டி வரலாற்றை மேலிருந்தே பார்க்கும் அணுகல்முறையைச் சற்றே பின்னுக்குத் தள்ளி கீழிருந்து எழுதப்பட்ட வரலாறு (History from Below) என்கிற கருத்தாக்கமும் இதன் ஊடாக முன்வைக்கப்பட்டது. “காலனிய இந்தியாவில் விவசாயிகளின் எழுச்சி குறித்த அடிப்படைக் கூறுகள்” எனும் குஹாவின் கட்டுரை காலனிய இந்தியாவின் அரசியல் களத்தில் நிகழ்ந்த விவசாயிகளின் எழுச்சிக்கும் அதற்குப் பிந்திய எழுச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகளின் மீது கவனம் ஈர்த்தது. முதல் ஆறு ஆய்வுத் தொகுதிகளுக்குப் பின்னர் குஹா விலகிக் கொண்டபோதும் அவரால் உருவாக்கப்பட்ட குழுவினர் அந்தப் பணியைத் தொடர்ந்தனர். குஹாவின் சபால்டர்ன் அணுகல்முறை மீதான விமர்சனங்களும் சமகால ஆய்வாளர்கள் சிலரால் முன்வைக்கப்பட்டன. அவை குறித்த சுருக்கமான கருத்துகளும் இத் தொகுப்பில் உண்டு.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.