Description
மக்களின் மதி துலங்கியதால், மாஜிகளான கடவுளரின் எண்ணிக்கை ஏராளம். ஒரு சில மாஜிகளை மட்டுமே கூறமுடியும். உருத்தெரியாமல் மட்டுமல்ல, பெயர் தெரியாமல் போய்விட்ட கடவுளரும் உண்டு. இன்று நம் நாட்டிலே உள்ளது போலத்தான், சாக்ரட்டீஸ் சாகுமுன்பு, பகுத்தறிவுக்காக இரத்தம் சிந்தும் உத்தமர் தோன்று முன்பு, கிரீசிலும் ரோமிலும், நார்வவேயிலும் ஸ்வீடனிலும், சீனாவிலும் எகிப்திலும், எந்த நாட்டிலும், விதவிதமான கடவுள் கூட்டம் இருந்துவந்தன. புராண இதிகாசங்களும், லீலைகளும், திருவிளையாடல்களும், இன்று இங்கு நம் நாட்டில் இருப்பது போலவே, அங்கெல்லாம் இருந்தன. இன்று இங்கு பகுத்தறிவு பேசப்பட்டால், பழமை கண்டிக்கப்பட்டால், கடவுள் பற்றி இப்படி எல்லாம் ஆபாசமான கதைகள் இருக்கலாமா ஆண்டவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்று கூறினால், மக்கள் கோபித்து, சந்தேகித்து, பகுத்தறிவு பேசுபவர்களை நாத்திகர் என்று நிந்தித்து வதைக்கிறர்களே, அதேபோலத்தான், அங்கெல்லாம் நடந்திருக்கிறது. அந்நாடுகளுக்கும் இந்நாட்டுக்கும் உள்ள வித்தியாசம், அங்கெல்லாம், கடவுட் கொள்கை தெளிவடைந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. இங்கு, பழைய நாட்களில் இருந்து வந்த எண்ணம் இன்றும் குறையவில்லை. வெளி நாடுகளிலே, ஒரு காலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருந்து, கோலாகலமான ஆட்சி செய்திருந்து, காவியர், ஓவியர், பூஜிதர் என்பவர்களால் போற்றப்பட்டு மகாசக்தி வாய்ந்த தெய்வங்கள் என்று புகழப்பட்டு, மணிமுடி தரித்த மன்னரையும், மத யானையை அடக்கும் மாவீரனையும் வணங்க வைத்து, அரசு செலுத்திய, எத்தனையோ ‘சாமிகள்’ இதுபோது, அந்த நாடுகளிலே மாஜி கடவுள்களாகிவிட்டன என்பதை நம் நாட்டு மக்கள் அறிய வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் கோடி கோடியாகப் பணம் செலவிட்டுக் கோயில் கட்டிக் கொலுவிருக்கச் செய்த கடவுளர், இன்று அங்கே மாஜிகளாயினர்!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.