Description
சோழ நாட்டில் உள்ள குடவாயில் (குடவாசல்) எனும் ஊர் முற்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பேரூர். சங்கப் புலவர்களான குடவாயில் கீரத்தனார், நல்லாதனார் ஆகியோர் இவ்வூரைச் சேர்ந்தோர். அப்பர், சம்பந்தர் பாடிய தலம். அருணகிரிநாதரின் திருப்புகழிலும் இடம்பெற்றுள்ளது. காளமேகப் புலவரும் இவ்வூரைப் பாடியுள்ளார்.
அத்தகைய சிறப்புகளைப் பெற்ற ஊரின் சிறப்பு, கோச்செங்கணானுக்கும் அவ்வூருக்கும் உள்ள தொடர்பு, சைவம், வைணவம், சமணம் ஆகிய சமயங்களுக்கும் இருந்த தொடர்பு, குடவாயிலோடு தொடர்புடைய சோழர்கள் யார் யார் போன்ற அரிய செய்திகளை உரிய தரவுகளோடு 10 கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
அதுமட்டுமல்ல, தலையாலங்கானம், தீபங்குடி, வண்டாழஞ்சேரி, இங்கனாட்டுப் பாலையூர், ஆவணம், பருத்தியூர், புத்தமங்கலம், சேங்காலிபுரம், பூம்பொழில், நாலூர் மயானம் போன்ற ஊர்களின் வரலாற்றுத் தொடர்புகள், இலக்கியப் பதிவுகள், கோயில்களின் சிறப்புகளை கல்வெட்டுகள், செப்பேடுகளை அடிப்படையாகக் கொண்டு விளக்கியுள்ளார் ஆசிரியர்.
குடந்தை என்பது கும்பகோணம் அல்ல குடவாயில், சோழவேந்தன் செங்கணான் சங்க காலத்தவன் அல்லன், கடைச்சங்க காலத்துக்குப் பிற்பட்டவன், சோழர் காலத்தில் போட்டியின்றி சைவமும் சமணமும் செழித்தன போன்ற பல அரிய செய்திகளை அறிய முடிகிறது.
நூலாசிரியரின் தொல்லியல் ஆய்வு, கல்வெட்டுப் புலமை, சங்க இலக்கியப் பயிற்சி அனைத்தும் வியப்பூட்டுகின்றன. கடந்தகாலப் பெருமிதங்களை இன்றைய தலைமுறையினர் அறிய இந்நூல் பெரிதும் துணைபுரியும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.