Description
தமிழின் முக்கியமான படங்களில் ஒன்று என்பதோடு, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தியப் படங்களில் ஒரு மைல்கல் ‘ஜெய் பீம்’.
சினிமா சூத்திரங்களை உட்செரித்தபடியே இங்கே அதுவரை உருவாக்கிவைக்கப்பட்டிருந்த அழகியல் இலக்கண மதிப்பீடுகளை இப்படம் நொறுக்கித் தள்ளியது.
இந்தியச் சமூகத்தின் ஒட்டுமொத்த அமைப்பிலும் பழங்குடிகள் எவ்வளவு விளிம்பில் அழுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நாம் சமத்துவமான அமைப்பு என்று நம்பும் நம்முடைய ஜனநாயக ஆட்சியமைப்பானது, எவ்வளவு கொடூரமான உள்முகத்தை வைத்திருக்கிறது என்பதையும் ஒருசேர அம்பலப்படுத்திய படைப்பு அது.
எப்படி ஒரு திரைப்படமானது மக்கள் அரசியலைப் பேசுவதற்கான கருவியாக அல்லது ஆயுதமாகக் கையாளப்பட வேண்டும் என்பதில் துல்லியமான இடத்தை ‘ஜெய் பீம்’ எட்டியது.
படத்தைப் பார்த்த எவரும் நிலைகுலைந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் தம் குரலாக இந்தப் படத்தைப் பார்த்ததோடு அல்லாமல், பாதிப்புக்குள்ளாக்கும் அமைப்பும், பொதுச் சமூகமும் குற்றவுணர்வுக்கு உள்ளாயினர். விளைவாக, நம்
சமூகத்தில் முன்னுதாரணம் அற்ற வகையில் பெரும் விவாதத்தை அது உருவாக்கியது. மொத்தத் தமிழ்நாடும் பேசியது.
நம்முடைய சினிமாக்காரர்கள் பார்வையில், அது மிகக் கரடான ஒரு கதை; இப்படி ஒரு வெற்றியை அது பெறும் என்று எவரும் நம்பியிருக்க மாட்டார்கள்.
கரடான ஒரு வாழ்க்கைச் சம்பவமானது அதன் தீவிரம் சற்றும் குறையாமல், அசாதாரண வேகத்துடன் மக்களைச் சென்றடைந்ததற்கும், நம் சமூகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியதற்கும் காரணம் த.செ.ஞானவேலுவின் திரைக்கதை. சினிமாவைப் பயிலக்கூடியவர்கள் தமிழில் கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று அது.
வெறுமனே திரைக்கதையை மட்டும் கொடுப்பதோடு அல்லாமல், ‘ஜெய் பீம்’ போன்ற ஒரு படம் எப்படி உருவானது என்பதை அதை உருவாக்கிய அணியினரின் உரையாடல் வழியாகவே தர விரும்பியது ‘அருஞ்சொல்’. சூர்யா – ஜோதிகாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இந்நூலை அது உருவாக்கி இருக்கிறது.
நீதிநாயகம் கே.சந்துரு, தயாரிப்பாளர் – நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் தொடங்கி தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை விரிவாக இந்நூலில் பேசியிருக்கிறார்கள்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.