Description
வருடாந்தம் தீர்த்தமாடும் தெய்வங்கள் குடியிருக்கும் கோயில்களும் – பல்சுவை தரும் மாங்கனிகளைப் பெற்றெடுக்கும் மாஞ்சோலைகளும் பண்டிகைகளுக்குக் குறைவில்லாத இல்லங்களும் – கல்வி வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட டியூட்டரிகளும் – பாதுகாப்பு என்ற போர்வையில் முளைத்த இலங்கை – இந்திய இராணுவத்தின் காவலரண்களும் கொண்ட அன்றைய காலத்தை நேசத்துடனும் பரவசத்துடனும் வலிகளுடனும் இரைமீட்டுகிறார் கானா பிரபா. எப்படித்தான் அது இருந்தாலும் ‘அது எங்கட காலம்தான்’ என்று பேருவகையோடு தனது நினைவுச்சிறையில் பாதுகாத்த ஒவ்வொரு காட்சிகளையும் புள்ளிகளாக இட்டுக் கோலங்களாக வடிவமைக்கிறார். ஒவ்வொரு அங்கமும் எளிமையான வார்த்தைகளினூடே அந்த இறந்தகாலத்திற்கே எம்மை அழைத்துச் செல்கின்றது. இந்தப் பதிவுகள் வாசகர்களின் நெஞ்சத்துக்கு நெருக்கமானவையாகவே தொடர்ந்து வாழும். ஏனென்றால் அது கானா பிரபாவின் காலம் மட்டுமல்ல; அது எங்கட காலமாகவும் எம் நெஞ்சமதில் வாழ்கிறது.
– லெ.முருகபூபதி
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல கதைகள் ஒளிந்திருக்கின்றன. அவை தந்த அனுபவங்களும் அப்படியே.
“அது எங்கட காலம்” என்ற இந்த நனவிடை தோய்தல் என் வாழ்வின் எண்பதுகள், தொண்ணூறுகளில் என்னைச் சுற்றி வாழ்ந்த நினைவுகளின் அடையாளமாக அமைகின்றது. இந்த நினைவு மீட்டல்களில் வாழ்ந்திருப்பவர்கள் பலர் இப்போது எம்மிடையே இல்லை. அந்த வெள்ளாந்தி மனிதர்களை, அவர்கள் இருந்த இருப்பை என் வாழ்வியலின் தரிசனத்தில் கொடுக்கிறேன். அதனால் தான் இது புனைவு கலக்காத நாட்குறிப்பின் சில பக்கங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. போர்க்கால வாழ்வியலை இன்று நினைத்துப் பார்க்கும் போது அந்த வலிகள் இன்றும் உள்ளிருப்பாகவே இருக்கிறது. நான் இறந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அதனால் தான் இன்னும் உயிர்ப்புடன் வாழ்கிறேன்.
2016 ஆம் ஆண்டில் தாயகத்தில் இந்த மனிதர்கள் வாழ்ந்த என் ஊரிலேயே முதற்பதிப்பாகவும் “மடத்துவாசல்” வழியாகக் கொண்டு வந்திருந்தேன். இந்த நூலுக்கான ஆக்கங்களைத் திரட்டிய அளவுக்குப் பெருஞ் சிரத்தை எடுத்தது அது கொண்ட தலைப்புக்காக.
– கானா பிரபா
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.