Description
ஆண் – பெண் விழைவின் தீராப் புதிர்களை, மாளாத் தவிப்பை, அறியவியலா மர்மங்களையே தி. ஜானகிராமன் (Thi. Janakiraman) தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார். மனமும் உடலும் கொள்ளும் வேட்கையை வசீகரமான அபாயத்துடன் பேசுகிறார். அனேகமாக மனதை உடல் வெற்றிகொள்வதாகவே பல படைப்புகளின் கதையோட்டமும் அமைந்திருக்கிறது. இந்த மீறலை இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் குற்ற உணர்வின் பரவசத்தைக் கிளர்த்துவதாகவும் அவரது பாத்திரங்கள் காணுகின்றன. இவற்றிலிருந்து வேறுபட்ட தி. ஜானகி ராமன் படைப்பு ‘அடி’. மனமும் உடலும் மேற்கொள்ளும் மீறல், சமூக நிர்ப்பந்தத்தின் முன் அடிபணிவதை இந்தக் குறுநாவல் சித்தரிக்கிறது. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் பாலுறவின் தனித்த சுழற்பாதைகளில் பயணம் செய்த மரபை மீறிய கலைமனம் நடமாட்டம் மிகுந்த பொதுவழியை அடைந்ததன் அடையாள மாகவோ, ஆண் பெண் உறவின் ரகசியத்தைக் கண்டடையும் முயற்சியின் இறுதிப் புள்ளியாகவோ இந்த நாவலைக் காணலாம். ‘அடி’ தி. ஜானகிராமன் (Thi. Janakiraman) தமது இறுதிக் காலத்தில் எழுதிய குறுநாவல். உடல் உடலை விழைவதும் உயிர் உயிருக்கு ஏங்குவதும் இறைச் செயல்கள். அதை மனிதப் புத்தி தோற்கடிக்கிறது. பின்னர் அதுவே நியதியாகிறது. இந்த நியதியைப் புறக்கணிக்கும்போது அடி விழுகிறது. அது விழுவது மனித உடலில் மட்டுமல்ல; தெய்வ மனதிலும்!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.