கிறிஸ்தவத்தில் ஜாதி
Rated 0 out of 5
( 0 reviews )₹750 ₹638
You save ₹112.00 (15%) with this book
- Author: நிவேதிதா லூயிஸ்
- Category: மதம் மற்றும் ஆன்மீகம்
- Sub Category: கட்டுரை, கிறிஸ்தவம், நேர்காணல்கள்
- Publisher: Her Stories
Hurray! This book is eligible for Free shipping.
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9788196598174
Description
என் அடையாளம் கிறிஸ்தவம் அல்ல, நான் சனாதனத்தை நம்புபவளுமல்ல என்கிற மறுப்புடன் இந்நூலைத் தொகுத்து எழுதுகிறேன். அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட எந்த மதத்தையும் ஒதுக்கி வாழும், மனிதத்தை மட்டுமே நம்பும் நபர் நான். என்னைச் சுற்றி வாழும் கிறிஸ்தவர்கள், குறிப்பாக தலித் கிறிஸ்தவர்களின் நிலையை, சூழலை, அவர்களுக்கே உரிய நுண்ணிய சிக்கல்களை, கடந்த ஈராண்டில் மாநிலம் முழுக்க என நூலின் ஆய்வுக்காகச் சுற்றித் திரிந்தபோது, கண்டும் கேட்டும் பார்த்தும் உணர்ந்திருக்கிறேன். ஆனாலும் அதை எழுத அத்தனை எளிதாக முன்வரவில்லை. இலங்கைத் தமிழ்க் கிறிஸ்தவத்துக்கும் தமிழ்க் கிறிஸ்தவத்துக்குமான பண்பாட்டு ஊடாட்டம் குறித்ததாகத்தான் அடுத்த நூல் எழுதவேண்டும் என எண்ணிக்கொண்டு இருந்தேன். புதுவை பிரெஞ்சு நிறுவன நூலகத்துக்குச் சில நூல்கள் தரலாம் எனச் சென்றபோது, ஒரு வெய்யில் நாளில் அங்கு தமிழ்த் துறைத் தலைவர் கண்ணன் சாரைச் சந்தித்தேன். பண்பாடு, அரசியல், கருத்தாக்கங்கள் என விரிந்த அந்த உரையாடலின் ஒரு கட்டத்தில், அடுத்து என்ன எழுதப் போகிறேன் என நான் சொல்ல, ‘லூசாப்பா நீ?’ என்பதாகப் பார்த்தார் அவர்.
குறைந்தது ஆயிரம் புத்தகங்களுக்கு நடுவே எப்போதும் அமர்ந்திருக்கும் கண்ணன் சார், புருவம் நெறிய என்னைப் பார்த்துவிட்டு, நான் ஏன் இலங்கை குறித்து எழுதக் கூடாது என ஓராயிரம் விளக்கங்கள் சொன்னார். நான் அடிப்படையில் பிடிவாதக்காரி. அவர் சொல்வதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது போல் காட்டிக்கொண்டாலும், அவர் சொன்னதன் பொருளை உள்வாங்கிக்கொண்டேன். நான் வழிக்கு வர எனக்கு ஒரு வேலை தரவேண்டும் என நினைத்தார் போல… “நாங்கள் புதிதாக வெளிக்கொணரவிருக்கும் நூலுக்கு நீங்கள் ஏன் கிறிஸ்தவத்தில் இருக்கும் ஜாதி பற்றி ஒரு கட்டுரை எழுதித்தரக் கூடாது?” என்று கேட்டார். சரி என அப்போதைக்குத் தலையாட்டிவிட்டேன். ‘அறியப்படாத கிறிஸ்தவம்’ நூலின் கள அனுபவத்தைக் கொண்டே ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம்தான். அப்படியே செய்வோம் என நினைத்துக்கொண்டேன். அன்று புதுவையிலிருந்து ஊர் திரும்பும் வழியில் ஒரு மோசமான விபத்து. சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று எங்கள் காரின்மேல் மோதியது. காரின் பின்பக்க டிக்கி அப்படியே நசுங்கிவிட்டது. இன்னும் சற்று அழுத்தத்துடன் மோதியிருந்தால், பின் சீட்டில் இருந்த இரண்டு குழந்தைகள் நிலை மோசமாகியிருக்கும். அன்று இரவு முழுக்க உறக்கம் வரவில்லை.
வாழ்க்கைதான் எத்தனை நிலையற்றது? இருப்பதற்குள் செய்ய இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதை ஏன் நான்கு சுவர்களுக்குள் உட்கார்ந்து வீணாக்க வேண்டும்? ஒரு கட்டுரைதானே? அதற்கு ஏன் வீட்டிலிருந்தே அரைத்த மாவை மீண்டும் அரைக்கவேண்டும்? நாம் ஏன் நேரில் ஒரு ஊருக்குச் சென்று பார்த்து எழுதக் கூடாது எனச் சிந்தித்து பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன். விபத்து ஒன்றிலிருந்து மீண்டுகொண்டிருந்த அன்புத் தோழர் ‘மகாத்மா’ செல்வபாண்டியனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு வீட்டிலிருந்து தரதரவென இழுத்துக்கொண்டு களத்துக்குச் சென்றாகிவிட்டது. காலை முதல் இரவு வரை இரண்டு நாள்கள் என்னுடன் அலைந்து திரிந்து தரவுகள் எடுக்க செல்வபாண்டியன் தோழர் உதவினார். வீடு திரும்பி மன நிறைவுடன் கட்டுரையை எழுதி முடித்து கண்ணன் சாருக்கு அனுப்பினேன். ஆனால், இரட்டை ஜாதிக் கல்லறைகளில் இருந்து மனம் விடுபட மறுத்தது. தலைவர் திருமா அவர்களின் மணிவிழா மலருக்காக ஏற்கெனவே மூத்த தலித் போராளிகள் சிலரிடம் எடுத்த பேட்டிகள் கையில் இருந்தன. அவற்றையும் நிறைவுக்குக் கொண்டுவர மண்டைக்குள் வண்டு குடைந்துகொண்டே இருந்தது. அடுத்தடுத்து பயணங்கள் கிளம்பிவிட்டேன்…
‘ஜாதி எங்கே இருக்கிறது? எங்கோ ஜப்பான்லயோ ஜெர்மனிலயோ இருக்கு’ என்று பொதுச் சமூகம் சொல்லிக்கொண்டு இருக்கும் சூழலில் தங்கள் மனம் திறந்து, தாங்கள் சந்தித்த ஒடுக்குமுறைகளைச் சொன்ன தலித் தோழர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தங்கள் புண்ணைத் தாங்களே மீண்டும் கீறிக்கொண்டு அந்த வலியை அடுத்தவருக்குச் சொற்களின் மூலம் கடத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அருந்ததியர் மற்றும் சலவைத் தொழிலாளர் மக்களிடம் கூடுதலாகத் தரவுகள் வாங்கியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. அம்மக்களைத் தேடித் தரவுகள் எடுப்பதில் மிகுந்த சிரமம் இருக்கவே செய்கிறது. இந்த நூலில் அது போதாமைதான், ஏற்றுக்கொள்கிறேன். நேர்காணல்களில், தலித்துகள் தங்களை என்ன ஜாதிப் பெயர் சொல்லி ஆதிக்க ஜாதியினர் திட்டினார்கள் என என்னிடம் பகிர்ந்தார்களோ, அவற்றை அவர்கள் மொழியிலேயே குறிப்பிட்டுள்ளேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எத்தனை சட்டங்கள் வந்தாலும், தலித்துகள் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவே அச்சொற்களை அப்படியே எழுத்தில் கொண்டு வந்துள்ளேன்.
‘இப்படித்தான் நிலைமை இருக்கிறது’ என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பேசிய ஆதிக்க ஜாதித் தோழர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். உண்மையை ஜாதிக் கோட்டுக்கு அந்தப் பக்கம் நின்றுகொண்டு பேசுவது மிகக் கடினமானது. அடிப்படையில் அவர்களுக்குப் புரிதல் பிழை; வாசிப்பும் பயணமும் பரந்துபட்ட நட்பு வட்டமும் இருந்தால் அவர்களிடமும் மாற்றம் ஏற்படும் என நான் நம்புகிறேன். 2000 ஆண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கும் கொடும்புண் ஆறுவது அத்தனை எளிதல்ல, அதிலும் அதை மீண்டும் மீண்டும் பிரிவினைவாத சக்திகள் சொறிந்துகொண்டே இருக்கும் பட்சத்தில்… வாய்ப்பே இல்லை எனக்கூடச் சொல்லலாம். ஆனால், மனிதன் ஆகச் சிறந்த நம்பிக்கைவாதி. எத்தனை மோசமான சூழலிலும் நம்பிக்கை என்கிற ஒற்றை நூலைப் பிடித்துக்கொண்டு மேலேறிவிடுவான் என்பதால், இங்கு ஜாதி என்றாவது ஒழியும் என நான் நம்புகிறேன்.
‘கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லையே’ எனச் சொல்லும் அன்பர்களுக்கான பதில்: ‘கிறிஸ்தவர்களிடையே ஜாதி இல்லை என்று கூறுகிற எவனும் பொய்யனுக்கும் திருடனுக்கும் ஒப்பாயிருக்கிறான்.’ (நன்றி: ‘கிறிஸ்தவ புதுமலர்’ தலித் கிறிஸ்தவ இதழ், 1965). கிறிஸ்தவத்தில் ஜாதி இருக்கிறது என்பதைப் பூசி மெழுக எந்தக் காரணமும் இல்லை. ‘இப்படி ஒரு நூலை எழுதி இந்துத்துவ பாசிச சக்திகள் கையில் ஆயுதமாகத் தரப்போகிறாயா?’ என்கிற சிலரின் கேள்விக்கான பதிலை பாபாசாகிப் அம்பேத்கரின் சொற்களில் தருகிறேன். ‘ஒடுக்கப்பட்ட ஒருவனைக் கிறிஸ்தவத்துக்குள் கொண்டுவந்துவிட்டால் தங்கள் கடமை முடிந்ததாக மிஷனரிகள் நம்புகின்றன. அம்மக்களின் அரசியல் உரிமைகள் குறித்து மிஷனரிகளுக்கு அக்கறையில்லை. அரசியலுக்குள் கிறிஸ்தவர்கள் இன்னமும் நுழையாமல் இருப்பதை அவர்களின் பெரும் பிழையாக நான் பார்க்கிறேன். அரசியல் துணையின்றி எந்த நிறுவனமும் பிழைத்தல் அரிது… உங்கள் சமூகம் (கிறிஸ்தவர்கள்) கற்றறிந்த சமூகம். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கல்வி பெற்றுள்ளனர். ஆனால், படிக்காத ஒடுக்கப்பட்ட மக்கள் அளவுக்கு இந்த மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவில்லை. சமூக நீதியை நீங்கள் புறந்தள்ளுகிறீர்கள்… உங்கள் சமூகம் படித்திருக்கிறது, ஆனால், உங்களுள் எத்தனை பேர் மாவட்ட நீதிபதிகளாக, மேஜிஸ்திரேட்டாக இருக்கின்றனர்? நான் சொல்கிறேன், இதற்குக் காரணம் நீங்கள் அரசியலைப் புறந்தள்ளுவதே. உங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதைப் பேசக்கூட இங்கே உங்களில் யாரும் இல்லை.’ (Ganjare Vol III p.142) சமூக நீதி குறித்த அக்கறை கொண்ட ஒரு தனி நபரால் என்ன செய்ய முடியுமோ அதையே இந்த நூல் மூலம் நான் செய்திருக்கிறேன்.
கிறிஸ்தவத்தில் ஜாதி முன்னுரையில் இருந்து…
Be the first to review “கிறிஸ்தவத்தில் ஜாதி” Cancel reply
You must be logged in to post a review.
You may also like
-
-
-
அறியப்படாத கிறிஸ்தவம் (இரண்டு பகுதிகள்)
₹1,299₹1,104(15% OFF + Free Shipping)Rated 0 out of 5( 0 reviews ) -
-
-
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.