Description
சென்னையில் ஊடகத்துறையில் பணிபுரிகிறார். காயசண்டிகை, பட்சியின் சரிதம் , பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், மருதம் மீட்போம் என்ற விவசாய வரலாற்று- அரசியல் நூலையும் எழுதிருக்கிறார். திரைத்துறையிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.
பொதுவாக இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன. படிமங்களுக்காகவும் உத்திகளுக்காகவும் முண்டியடித்து கவிதைக்கான தருணங்களை இழந்து நிற்குமிந்த சொல்விளையாட்டு அழிவுவெளியில் இளங்கோ கிருஷ்ணன் கவியுலகு மொழியின் புகலிடமாய் உதிக்கிறது. ஆகவேதான் இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் அவலங்களால் தத்தளிக்கின்றன. அவஸ்தைகளால் கொந்தளிக்கின்றன. இவற்றையெல்லாம் தருணங்களாய் உணர்கின்றன. அன்றாடங்கள் அனைத்திலும் சுதந்திரம் கேட்கும் ஒரு குரல் இத்தொகுப்பின் பிரதான படிமமாகிருக்கிறது. காலந்தோறும் அறத்தினால் செலுத்தப்படுமோர் இன மரபின் ஆவேசத்தையும் பெருங்கருணையையும் கையாலாகத் தனத்தையும் நம் முன் அளிக்கிறது.அதேவேளை நமது இருப்பின் மன எழுச்சியையும் அமைதியையும் அபூர்வமாய் குறியீட்டுத் தன்மையாக்கும் வல்லபமும் இத்தொகுப்பில் அசாதாணமாய் நிகழ்ந்திருக்கிறது. இதுவோர் அரூப தரிசனம். இவரின் கவிதைகளை தரிசிக்க விழையும் ஒரு வாசகனுக்குத் திறவுகோலாய் இக்கவிதை அமையக்கூடும்.
புத்தன்
துக்க வீட்டில்
ஒவ்வொருவராய்
எழுந்து செல்கிறார்கள்
துக்க வீடும் இறுதியாய்
எழுந்து சென்றது
துக்கம் எழுந்து செல்லும் வரை காத்திருக்கிறான் புத்தன்
சமகாலத்தின் கவியுலக ஆளுமைகளில் இளங்கோ கிருஷ்ணன் முதன்மையானவர் என்பதில் தமிழ் மொழிக்கு மாற்றுக் கருத்திராது என்பது எனது துணிபு.
-கவிஞர் அகரமுதல்வன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.