விசித்திரன்
₹450 ₹428
- Author: டாக்டர் எல் கைலாசம்
- Category: வரலாற்று புனைகதை
- Sub Category: சரித்திரப் புதினம்
- Publisher: வானதி பதிப்பகம்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2021
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
விசித்திரன் பல்லவ நாட்டு மாமன்னர் மகேந்திரபல்லவரின் இளமைப்பருவ காலக் கதையாயிற்றே! இதில் எப்படி காவிரி? என்று எனது
வாசக எஜமானர்கள் யோசிப்பது எனக்கும் புரிகிறது. சொல்கிறேன் கேளுங்கள்.
மாமல்லபரத்தில் நடந்த பல கொலைகளுக்கு மூல காரணம் தஞ்சையில் இருக்கலாம் என்று எண்ணிய கதையின் நாயகன் விசித்திரனும் அவனது மனைவி பிரதிகாவும், தஞ்சையை நோக்கி வரும் பொழுது காவிரி அம்மையின் அளவற்ற அன்பினால் அவர்கள் தடுத்தாட் கொள்ளப்படுகிறார்கள்.
தங்களை தாழ்மையுடன் விசிதிரனுடனும், பிரதிகாவுடனும் சற்று நேரம் பயணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
“சற்றுத்தொலைவிலிருந்த கரை உடைந்துவிட்டிருந்து அவர்களுக்கு தெரிந்தது. காவிரியின் கரை உடைந்து பொங்கிய அமிர்தம் எங்கும் பரவி வந்து கொண்டிருந்தது. ஆலமரம் இருந்த இடம் சற்றுப் பள்ளமாக இருந்ததால், நதியிலிருந்து பொங்கிய வெள்ளம் ஆலமரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. வெள்ளை நுரையுடன் பொங்கி வந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி உயர்ந்து கொண்டே வந்தது. முதலில் தெரிந்த மரங்கள் எல்லாம் சற்றுநேரத்தில் மூழ்கிப்போக, பனையின் காலைத் தொட்ட வெள்ளம் கொஞ்சமாக உயர்ந்து பனையே தெரியாமல் மூழ்கியது. நீரின் வேகமும் மிக அதிகமாக இருந்தது அதில் அடித்து செல்லப்படும் செடிகொடிகளின் வேகத்திலிருந்து புரிந்தது. ஆலமரத்தின் உச்சியிலிருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த பிரதிகாவுக்கு புரவிகள் என்ன ஆயிற்றோ என்ற கவலை வந்தது. புரவிகளை விட்டுவிட்டு வந்த இடத்தை பார்த்தாள். இரண்டு புரவிகளும் வெள்ளம் வருவதைப் பார்த்து விட்டு ஓடிக்கொண்டிருந்தன. கவலையில்லை. பிறகு அவைகளைப் பிடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த பிரதிகா, விசித்திரன் எங்கு என்று பார்த்தாள். அவள் இருந்த கிளையிலிருந்து இரண்டு மூன்று கிளைகள் தள்ளி விசித்திரன் இருந்தான். அவனது கண்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தன.
பிரதிகா தனது காலை யாரோ தடவுவது போலிருந்தது. அவள் கீழே குனிந்து பார்க்க காவிரியில் வந்த நீர் அவளின் காலைத் தொட்டு ஓடிக்கொண்டிருந்தது. கிளையின் மேலும் இன்னும் ஏறினால் கிளை முறிந்து விடும். மேலேயும் போகமுடியாது. அவளின் பாதத்தைத் தொட்ட நீர் உயர்ந்து அவளின் இடுப்புவரை வர பிரதிகா நிலை தடுமாறினாள். விசித்திரன் எங்கு என்று பார்த்தாள். அவன் இடுப்புவரை வந்த வெள்ளம் மேலும்மேலும் ஏறிக்கொண்டிருப்பதை கவனித்தாள். என்ன செய்வது என்று புரியவில்லை. ஆற்றில் தவறி விழுந்தால், காவிரியம்மை எங்கு இழுத்துச் செல்லுவாள் என்பது தெரியாது. என்னதான் நீச்சல் தெரிந்திருந்தாலும், காவிரியம்மையின் வேகத்துக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியாது என்பது விசித்திரனுக்கு புரிந்தது. அதற்குள் கொஞ்சம் கொஞ்சமாக வந்த நீர் பிரதிகாவின் மார்பு வரை வர, அவள் என்ன செய்வது என்று திணறினாள்.
‘‘பொன்னியம்மையே எங்களைக் காப்பாற்று’ என்று அவள் உள்ளமும் செவ்வாயும் சொல்ல, எங்கிருந்தோ வந்த பொன்னியும், பொன்முடியும் வந்து அவர்களைக் காப்பாற்ற உதவினார்கள்.”
கல்கி தனது பொன்னியின் செல்வனில் பெரியபழுவேட்டரையர் கொள்ளிட வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் சித்திரத்தை பாருங்களேன்.
“நதியில் கரையின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. மழை பெய்தபடியால் கரை மேலேயும் ஓரளவு தண்ணீராயிருந்தது. இருட்டைப் பற்றியோ சொல்ல வேண்டியதாயில்லை. ஆகவே, அந்த வீரக் கிழவர் நடந்து சென்ற போது, தம் எதிரிலே நதிக் கரையின் குறுக்கே கொஞ்சம் தண்ணீர் அதிகமாக ஓடியதைப் பற்றி அதிக கவனம் செலுத்தவில்லை. திடீரென்று முழங்கால் அளவு ஜலம் வந்து விட்டதும், சற்றுத் தயங்கி யோசித்தார். தொடையளவு ஜலம் வந்ததும் திடுக்கிட்டார். அதற்கு மேலே யோசிப்பதற்கு அவகாசமே இருக்கவில்லை. மறுகணம் அவர் தலை குப்புறத் தண்ணீரில் விழுந்தார். கொள்ளிடத்தின் கரை உடைத்துக் கொண்டு அந்த இடத்தில் தெற்கு நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்த வெள்ளம் அவரை உருட்டிப் புரட்டி அடித்துக் கொண்டு போயிற்று. கரைக்கு அப்பால் பள்ளமான பிரதேசமானபடியால் அவரை ஆழமாக, இன்னும் ஆழமாக அதல பாதாளத்துக்கே அடித்துக் கொண்டு போவது போலிருந்தது. படகு கவிழ்ந்து நதியில் போய்க் கொண்டிருந்த வெள்ளத்தில் மூழ்கியபோது அவர் சற்று எளிதாகவே சமாளித்துக் கொண்டார். இப்போது அவ்விதம் முடியவில்லை. உருண்டு, புரண்டு, உருண்டு புரண்டு, கீழே கீழே போய்க் கொண்டிருந்தார். கண் தெரியவில்லை; காது கேட்கவில்லை. நிமிர்ந்து நின்று மேலே வரவும் முடியவில்லை, மூச்சுத் திணறியது. யாரோ ஒரு பயங்கர ராட்சதன் அவரைத் தண்ணீரில் அமுக்கி அமுக்கித் தலை குப்புறப் புரட்டிப் புரட்டி அதே சமயத்தில் பாதாளத்தை நோக்கி இழுத்துக் கொண்டு போனான்.
‘ஆகா அந்த ராட்சதன் வேறு யாரும் இல்லை! கொள்ளிடத்தின் கரையை உடைத்துக்கொண்டு, உடைப்பின் வழியாக அதிவேகமாகப் பாய்ந்த வெள்ளமாகிய ராட்சதன்தான்! அவனுடைய கோரமான பிடியிலிருந்து பயங்கரமான உருட்டலிலிருந்து தப்பிப் பிழைக்க முடியுமா? கால் தரையில் பாவவில்லையே? கைக்குப் பிடி எதுவும் அகப்படவில்லை? மூச்சுத் திணறுகிறதே? கழுத்தைப் பிடித்துத் திருகுவது போலிருக்கிறதே? காது செவிடுபடுகிறதே! துர்க்கா பரமேசுவரி! தேவி! நான் இந்த விபத்திலிருந்து பிழைப்பேனா?”
கிட்தட்ட கல்கிக்கு அருகில் வந்திருக்கிறேனா?
எனக்கு நம்பிக்கையில்லை. அவரைத் நெருங்கவே முடியாது.
தெய்வத்தை ஆராதிக்கத்தான் முடியும். அருகில் செல்ல முடியுமா? இந்த ஜென்மத்தில் முடியாது என்று தோன்றுகிறது.
அடுத்த பிறவியில் கருப்பண்ணர் உதவுவார்
எஜமானரே
Be the first to review “விசித்திரன்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.