அகிலாண்ட பாரதி ஒரு கண் மருத்துவர். சங்கரன் கோவிலில் பணிபுரிகிறார். அது மட்டுமல்ல, நாவல், சிறுகதைகள், அறிவியல் புனைவுகள், சிறுவர்களுக்கான கதைகள் மருத்துவம் சார்ந்த கட்டுரைகள், இதழ்களில் அவ்வப்பொழுது எழுதிய பால்யகால நினைவுகள், அனுபவக் குறிப்புகள் – இப்படி ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் அவர் என்று அறிந்து வியந்தேன். அகிலாண்ட பாரதியின் இந்தக் கதைகளில், எளிய மனிதர்களின் மீது அவருக்கு இயல்பாகவே இருக்கின்ற அக்கறையும் அனுதாபமும் வெளிப்படுவதை அவதானிக்கிறேன். ஒரு படைப்பாளிக்கு அடிப்படையில் இருந்தேயாக வேண்டிய குணாம்சம் அது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தள்ளுகின்ற கூலித் தொழிலாளியின் பார்வையிலிருந்து வெள்ளந்தியான மொழி லாவகத்துடன் அவர் கூறிச் செல்லும் ”மனசு மாறிடுச்சு” கதை சம்பவக் கோர்வைகளால் அபாரமாகத் தொழிற்பட்டிருக்கிறது. பாரதியின் கதைகளில் வடிவம் சார்ந்த பிரச்சனைகள் ஏதுமில்லை. சில கதைகளின் கூறு முறையில் கரிசல் இலக்கிய மேதை தெரிகிறார். மாபெரும் முன்னோடி ஒருவர் நம் எழுத்தில் மெல்ல மெல்ல மின்னி மறைவதும் கூட பெருமழைக்கான அறிகுறி தான், டாக்டர் அகிலாண்ட பாரதி நிறைய எழுதி தமிழ் இலக்கியத்தில் அந்தக் கரிசல் இலக்கிய மேதை கி.ராவைப் போல அழுத்தமான தடம் பதிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.
– கீரனூர் ஜாகீர் ராஜா
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.