மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும்
₹70 ₹67
- Author: லிங்கன்
- Category: அரசியல்
- Sub Category: கட்டுரை
- Publisher: பாவை பப்ளிகேஷன்ஸ்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
தமிழகத்தில் பொன்னேரி, திருவெற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், சேப்பாக்கம் & திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், திருப்போரூர், செய்யூர், திண்டிவனம், வானூர், கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், சீர்காழி, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, திருவாடனை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருசெந்தூர், ராதாபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர் என 37 சட்டப்பேரவைத் தொகுதியிலும், திருவள்ளூர், வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என 15 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மீனவ வாக்காளர்கள் விரிந்து இருக்கின்றனர். வேறு வார்த்தையில் சொன்னால் மீனவ வாக்காளர்கள் பல தொகுதிகளில் பிரித்துப் போடப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் 15 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்த தேர்தல்களால் சுமார் 3000 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த 3000 சட்டமன்ற உறுப்பினர்களில், மீனவ சமூகத்திலிருந்து 26 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும்தான், பல்வேறு கட்சிகளின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
13 முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் சுமார் 600 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகத்திலிருந்து தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து ஒரே ஒருவர் மீனவ சமூகத்திலிருந்து (ஜெயவர்த்தன் – அ.தி.மு.க.) தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரம் கிடைத்த பின் ஒரே ஒரு மீனவப் பிரதிநிதிதான் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடலோரப்பகுதியில் 15 நாடாளுமன்றத் தொகுதிகள் அமைந்துள்ளன. அவற்றில் 5 தொகுதிகள் தனித்தொகுதிகளாக உள்ளன.
மாவட்ட செயலாளராகவும் ஒன்றியசெயலாளராகவும் மிகவும் அரிதாகவே நியமிக்கப்படுகிறார்கள். மாநில பதவிகள் என்பது நினைத்து பார்க்க முடியாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீனவச் சமூகம் சார்பாக மூன்று வேட்பாளர்களை அரசியல் கட்சியினர் நிறுத்தினர். அந்தத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் ஜெயவர்த்தனும், வடசென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாளும், கன்னியாகுமரியில் ஜெயின்டீன் போட்டியிட்டனர். சுதந்திரத்திற்குப் பிந்தைய நாடாளுமன்றத் தேர்தல்களில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒருமுறை கூட மீனவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை.
கன்னியாகுமாரி மாவட்ட மக்கள் தொகையில் மீனவர்கள் 20% வாழ்ந்து வருகிறார்கள். கன்னியாகுமரித் நாடாளுமன்ற தொகுதிக்கும் மற்றத் தொகுதிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்பது, இங்கு இதுவரை நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் ஒரே ஒரு சாதியைச் சார்ந்தவர்கள்தான் வெற்றிப் பெற்றுள்ளனர். அதிக மக்கள்தொகை கொண்ட சாதியைச் சார்ந்தவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பளிக்கின்றன. கன்னியாகுமரியின் மொத்த மக்கள் தொகையில் 20% – இடம் பெற்றிருக்கும். இரண்டாவது பெரிய சமூகமான மீனவர்களிலிருந்து இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 1957 – ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லூர்து அம்மாள் சைமனும், 1996 – ஆம் ஆண்டு தி.மு.க. வைச் சேர்ந்த இரா.பெர்னார்ட் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழகத்தில் புகழ் பெற்ற, முத்துக் குளித்தலை நகரமான தூத்துக்குடியில் 1952 – ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ரோச் விக்டோரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு இன்றுவரை மீனவ சமூகத்தைச் சார்ந்த ஒருவரைக் கூட சட்டமன்றத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள எந்தத் தொகுதியிலும் மீனவர்கள் பெரும்பான்மையாக இல்லாததால் மீனவர்கள் போட்டியிட அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்காத நிலை உள்ளது.
மண்டல் ஆணையம், மீனவர்கள் உட்பட்ட சாதி சிறுபான்மையினருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், அந்தந்தந்த மக்கள் வாழுகின்ற பகுதியை ஒன்றிணைத்து, சட்டமன்றத் தொகுதிகளையும், நாடாளுமன்றத் தொகுதிகளையும் மறுசீரமைத்து, புதிய தொகுதிகளை உருவாக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தது. தமிழகத்தில் சமுகநீதி பேசுகிறவர்கள் அனைவரும், இந்த மண்டல் ஆணையம் பரிந்துரைந்த தொகுதி சீரமைப்புப் பற்றி பேசுவதில்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் இந்தப் பரிந்துரையைப் பற்றி பேசாமல் கடந்து சென்று விடுகிறார்கள்.
மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி வேணுகோபால் கமிசன் : பரிந்துரைகள் (30) மீனவர்கள் தங்கள் குறைகளை அரசுக்கு எடுத்துக்காட்ட ஏதுவாக மீனவ சமுதாயத்துக்கு என்று ஓர் சட்டமன்றப் பேரவைத் தொகுதி ஒதுக்கலாம்.
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ஒதுக்கீடு கூட மீனவப் பகுதிகளுக்கு தேவையான அளவிற்கு ஒதுக்கப்படுவதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் மேம்பாட்டு நிதியில் மீனவப் பகுதிகளுக்கு 2% முதல் 3% ஒதுக்கப்படுகிறது. இந்தப் புள்ளி விபரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டது. இது போல்தான் தமிழகம் முழுவதும் மீனவர்கள் வாழ்ந்துவரும் பகுதியில் நடைமுறைகளாக இருப்பதாக தெரிகிறது.
மீனவக் குப்பங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களும். அரசு பள்ளிகளும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஏற்படுத்தப்படவில்லை.
இந்தியாவில் மீன்பிடித்தொழில் மூலமாக அந்நிய செலவாணி மத்திய அரசுக்கு 60,000 கோடி ரூபாயும், மாநில அரசுக்கு 4000 கோடி ரூபாயும் வருமானமும் கிடைக்கிறது. மீனவர்கள் ஈட்டித்தரும் அந்நிய செலவாணி மூலம் கிடைக்கிற வருவாயில் முக்கால் பங்கை அரசு எடுத்துக்கொள்கிறது. கால் பங்குதான் அரசின் வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த ஜி.டி.பி.- யில் மீனவர்களால் 1% கிடைக்கிறது. மத்திய பட்ஜெட்டில் மீனவர்களுக்கான திட்டங்கள் எந்தவிதமான விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்படுகின்றன. ஒக்கிப்புயல் பேரழிவின் போது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசு சிறப்பு நிதியாக 100 கோடி ரூபாயை அளித்தது..
மீனவர்களின் அரசியல் வரலாற்றிலும், இயற்கைப் பேரிடர் வரலாற்றிலும் முக்கிய நிகழ்வாக ஒக்கிப் புயல் பேரிடரைக் கூறமுடியும். ஒக்கிப் பேரிடர் நிகழ்ந்த பிறகு தமிழகம் முழுவதும் மீனவர்களிடையே பெரும் எழுச்சியும் மாற்றமும் ஏற்பட்டிருக்கிறது. பழவேற்காடு முதல் நீரோடி என்ற வார்த்தை தமிழக மீனவர்களை ஒரு புள்ளியில் இணைக்கும் வார்த்தையாக உருவானது. மேலும், அரசு அதிகாரத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதை ஒக்கிப் பேரிடர் பிறகு வந்த மாற்றமாக கூற முடியும்.
தமிழக சட்டமன்றத்தில் ஒக்கிப் பேரிடர் பற்றி எந்தவித விவாதங்களும் நடைபெறவில்லை. முதலமைச்சர் 110 விதியின் கீழ் ஒரு அறிக்கையை மட்டும் படித்துவிட்டு சென்றார். கடலோரத்தில் ஒக்கிப் பேரிடரின் போது ஏற்பட்ட இழப்புகள், சமவெளியில் வாழுகின்ற மக்களுக்கு ஏற்பட்டிருந்தால் தமிழகமே ஒன்றாக இணைந்து குரல் எழுப்பி இருக்கும். ஒக்கிப்பேரிடரின் போது 227 உயிர்களை பறிகொடுத்தார்கள். அந்த இழப்பின் வலி பற்றி தமிழக சட்டமன்றத்தில் சின்ன விவாதம் கூட நடைபெறவில்லை.
நாடாளுமன்றத்தில் ஒக்கிப் பேரிடர் பற்றி காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் உரையாற்றினார். அந்த உரையில் ‘கடல் சீற்றத்தினால் மீனவர்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் மீனவர்களை கடல் சீற்றங்களிலிருந்து காப்பாற்ற, மீனவர்களை கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்’ என்றார். சசி தரூக்கு நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மீனவ மக்கள் தங்களுடைய இரண்டு லட்சம் வாக்குகளை செலுத்தியுள்ளனர். ஏனெனில் சசி தரூரை எதிர்த்து நின்ற வேட்பாளர் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர். அதனால் பா.ஜ.க.வை தோற்கடிக்க மீனவர்கள் தங்க்களுடைய வாக்குகளை காங்கிரஸ் கட்சிக்கு அளித்தனர். மீனவர் அல்லாதவர்கள் மீனவ பிரசனைகளை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பதற்கு இதை உதாரணமாகப் பார்க்கமுடியும். மீனவர்கள் பிரச்சனைகளைப் பற்றி மீனவர்கள் பிரதிநிதி பேசுவதற்கும் மற்றவர்கள் பேசுவதற்குமான வித்தியாசம் இதுதான்.
இன்றைக்கு நாடு முழுவதும் பேரிடர் பற்றிப் பேசுகிறோம். சுனாமி வந்த பிறகுதான் பேரிடர்ச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பேரிடர் திட்டங்களுக்கு உலக வங்கி நிதியுதவி செய்தது. பேரிடர் மேலாண்மை திட்டத்தில் கடலுக்குள் புயல் வரும்முன் என்ன செய்ய வேண்டும், வரும்போது என்ன செய்ய வேண்டும், புயல் வந்த பின் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லப்படவில்லை. இதனால் அரசு அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திணறுகிறார்கள். ஒக்கிப் புயலுக்குப் பின் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தை தமிழக அரசு மாற்றியமைத்தது. அந்த மாற்றியமைக்கப்பட்ட திட்டத்திலும் முன்பு விட்டுப்போன விஷயங்கள் இடம் பெறவில்லை.
கடலின் இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது. ஆனால் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளைத் குறைக்க முடியும். இந்த இழப்புகளை குறைப்பதற்காக திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு முறை பேரிடர் ஒரிசாவில் வந்தபோது, ஒரே நாளில் 13 லட்சம் மக்களை இடம் பெயர வைத்து காப்பாற்றினார்கள். தமிழகத்தில் ஒக்கிப் புயலின் பேரிடரின் போது, ஹெலிகாப்டர் மூலம் காணமல் போன மீனவர்களை காப்பாற்றப் போவதாகக் கூறினார்கள். ஹெலிகாப்டர் இரவில் பறக்காது, மேலும் காற்று அதிகமாக இருந்தாலோ, மழை அதிகமாக இருந்தாலோ ஹெலிகாப்டர் பறக்காது. கடலில் தத்தளிக்கும்போது ஒவ்வொரு வினாடியும் முக்கியம். ஆனால் கடல் கொந்தளிப்பு அடங்கிய பின்புதான் மீட்க முடியும் என்கிறார்கள்.
கடலில் சென்று காணாமல் போகும் மீனவர்களை 7 ஆண்டுகளுக்கு பின்தான் இறந்தவர்களாக அரசு அறிவிக்கிறது.கடலுக்குள் மீன்பிடிக்க சென்றவர்கள், திரும்பி வராததால், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்து போயி ருக்கிறார்களா என்று தெரியாததால், கடலோரங்களில் பாதி விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது போன்ற பிரச்சனைகளில் மீனவ சமூகத்தைச் சார்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க முடியும்.
மண்டல் ஆணையத்தின் முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது. நடைமுறையில் பழங்குடியினருக்கான அனைத்து உட்கூறுகளும் மீனவர்களிடம் இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் மீனவர்களை பழங்குடியினராக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறார்கள். இந்தக் கோரிக்கையை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. ஆனால் இன்று வரை மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
தமிழகத்தில் குறைந்தது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலாவது மீனவர்களை வேட்பாளராக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும். நாடாளுமன்றத் தொகுதிகளில் மீனவர்களுக்கு குறைந்தது இரண்டு தொகுதிகளையாவது அரசியல் கட்சிகள் ஒதுக்க வேண்டும். அந்தத் தொகுதிகளில் எல்லா அரசியல் கட்சிகளும் மீனவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தொகுதியில் மறுசீரமைப்புக்குப் பின் 35% மீனவர் வாக்காளர்கள் உள்ளனர். அந்தத் தொகுதியில் அனைத்து அரசியல் கட்சிகளும் மீனவ சமூகத்தைச் சார்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முடிவு எடுக்க வேண்டும். அதுபோல தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், ஆர்.கே.நகர் போன்ற தொகுதிகளில் அதிகமாக மீனவர்கள் வாழ்ந்து வருவதால், அந்த தொகுதிகளிலும் மீனவர்களை வேட்பாளராக்கலாம்.
தமிழகம் சமூகநீதியின் பிறப்பிடம் என்று பெயர் பெற்றது. சமூகநீதி என்பது இடஒதுக்கீடு என்று சுருக்கக் கூடியது அல்ல. அனைத்திலும் நீதி கிடைக்க வேண்டும். ஒரு சமூகம் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொண்டால்தான், அந்த சமூகம் வளர்ச்சியடைய முடியும். அரசியலிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவதற்கான மீனவர்களின் உரிமையினை அவர்களிடம் ஒப்படைப்பதே தமிழக சமுகநீதியின் கடமையாக இருக்க முடியும்.
வழக்கறிஞர் லிங்கன்.
Be the first to review “மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.