Description
இந்த எனது கரமுண்டார் வூடு நாவல், எனது கண்டுபிடிப்பு அல்ல. கண்முன்னே நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் ஊத்தையும், உடைசலுமாகிப் போன கனவுகளுமல்ல. வெறும் வாழ்க்கையின் கரடுமுரடான உடைசல்கள் உருவம் பெற முடியாத, கரடு தட்டிப்போன நேற்றும் இன்றும் நாளையும் ஆன எங்கள் வாழ்க்கை. இவை ஓர் ஒழுங்கான தத்துவத்துக்குள்ளோ, ஜாதிக்குள்ளோ, நம்பிக்கைக்குள்ளோ, சிந்தனைக் குறிக்கோளுக்குள்ளோ அடங்கவில்லையே என்ற அங்கலாய்ப்பு எனக்கும் உண்டு. இந்த வாழ்வின் இந்த அம்சங்களை என் முகத்தில் அறைந்து சொன்ன சத்தியங்களை உங்கள் முன் வைக்கவே இந்த நாவலை எழுதியிருக்கிறேன். இரண்டு நூற்றாண்டுகளாய் சிதிலமடைந்துபோன ஒரு ஜன சமூகத்தின் சரிவை நேரடியாகவும், செவி வழியாகவும், உணர்வின் வாசல்கள் வழியிலும் நான் அறிந்துகொண்ட உணர்வுகளை, உங்களுக்கும் மனசுக்குமாய் இடமாற்றம் செய்தது மட்டுமே எனது பணியாக இருந்தது.
இந்த நாவலை நான் எழுதியபோது என் அருகே இருந்து ஒவ்வோர் அத்தியாயமாக நான் எழுத எழுத வியப்புடனும், பயத்துடனும் அவற்றையும், என்னையும் படித்துக் கண்ணீர்விட்டுக் களைத்து என்னுடன் கூடவே எழுத்தில் பங்கு காட்டிய என் தாயார் இன்று இல்லை. நூற்றாண்டுகளுக்கு முன் கரமுண்டார் கோட்டை என்ற எனது பூர்வீக கிராமத்தை விட்டு ஓடிவந்த எனது தந்தையாரின் தந்தை பற்றி என் பாட்டியும் பூட்டியும் சொல்லி அழுத ஓலங்கள் இன்றும் எனக்குள் இருந்தாலும், இவற்றுக்கு சாட்சியாய் இருந்து கதை காவியமாய்ச் சொன்ன எனது அப்பாயிகள் சமாதானத்தம்மாள், துரச்சியம்மாள், மங்களத்தம்மாள் ஆகிய கிடைத்தற்கரிய மனுஷிகள் இன்று இல்லை. இவற்றின் கனவுத்தன்மைகளை முறித்து எறியக் கற்றுத்தந்து எனது கனவுகளை நிஜமாக்க இவற்றை மறுக்கவும் துறக்கவும் ஏற்கவும் கற்றுத்தந்த என் தந்தை எட்வர்டு கார்டன் கரமுண்டார் என்கிற முரட்டுக் கள்ள ஜாதி மனுஷனும் இன்று இல்லை.
– தஞ்சை ப்ரகாஷ்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.