Description
இளம் தமிழ்க் கவிஞன் தனது கவிதைகளை இன்று எழுதத் தொடங்குகிற போது அவனது முதுகின் மீது ஈராயிரம் ஆண்டுக்கால கவிதை அழகியலின் பாரமான ஒரு மூட்டை இருந்துகொண்டு அவனைப் புதிய கவிதை மலைகளை ஏற விடாமல் தடுப்பது சகஜம்தான். போதாக்குறைக்கு கம்பனும், வள்ளுவனும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் தொடாமல் விட்டு வைத்த எந்த சிகரத்தில் ஏறி தன்னால் எந்தக் கொடியை நாட்ட முடியும் என்ற மனக்களைப்பு வேறு இருக்கிறது. இவற்றை மீறி ஒரு புதிய கிரகத்தைக் கண்டுபிடிப்பது மாதிரி ஒரு கவிதை எழுத வேண்டும் என ஆசைப்படும் கவிஞன் என்றைக்கும் என் போன்ற பிரியத்துக்குரியவன்தான். அவனே நவீன தமிழ்க் கவிதையின் புதிய எல்லைகளை நிறுவத் தேவைப்படும் தன்னம்பிக்கை முனை. சித்துராஜ் இந்த வகையறாவைச் சேர்ந்தவராகவே எனக்குத் தோன்றகிறார். இந்த வகையில் 21-ஆம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைக் குரல்களில் கவிஞர் சித்துராஜ் பொன்ராஜின் குரல் மிக முக்கியமான ஒன்றாக எனக்குத் தெரிகிறது. இதுவரை தொடர்ந்து பேசப்பட்ட கவிதைக்கான கருப்பொருள்களையும், உருவ அமைதிகளையும், மரபார்ந்த அழகியலைச் சுவாசிக்கும் மொழி வெளிப்பாட்டையும் சற்றே தள்ளி வைத்து, ஒரு புதிய கவிதை அழகியலைப் பரிட்சித்துப் பார்க்கும் செயலில் இறங்கியிருக்கிறார் சித்துராஜ். சுருக்கமாய்ச் சொல்வதெனில் தமிழ்க் கவிதை ஒரு நல்ல பாம்பைப் போல் தன் சட்டையை உரித்துப் போட்டுவிட்டுப் பளபளக்கும் செதில்களோடு கூடிய புதிய தோலுடன் நிலவொளியில் நகர்ந்து செல்வதை கவிஞர் சித்துராஜ் பொன்ராஜின் ‘இத்தாலியனாவது சுலபம்’ கவிதைத் தொகுதியில் காண்கிறேன். – கவிஞர் இந்திரன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.