“மூன்று முக்கியத்தரப்புகள் நாவலில் உள்ளன. ஒன்று காந்தியடிகளின் தரப்பு. பொதுவாழ்வில் தனிவாழ்வின் சிறப்பைக் கண்டுணரும் பார்வையைக் கொண்ட காந்தியடிகள் தன் மகனை பொதுவாழ்வை நோக்கிச் செலுத்த விழைந்து, அம்முயற்சியில் தோல்வியடைகிறார். இன்னொன்று கஸ்தூர் பா தரப்பு. மகனுடைய வெற்றியையும் வளர்ச்சியையும் உள்ளூர விழைபவராகவும் அதற்காக கணவரிடம் உரையாடுபவராகவும் காணப்படுகிறார். தன் முயற்சிகளில் அவருக்கும் தோல்வியே கிடைக்கிறது.
ஹரிலால் மூன்றாவது தரப்பு. இளைய காந்தி என பட்டப்பெயர் சூட்டி மற்றவர்கள் அழைக்கும்போது உள்ளூர மகிழ்ச்சி அடையும் அவர் மீண்டும் மீண்டும் சிறைக்குச் செல்வதன் வழியாக எதைச் சாதிக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு அவரால் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியாதவராக தடுமாறுகிறார். தன் தந்தை வகுத்தளிக்கும் வழியின் மீது அவநம்பிக்கையுற்று தனக்கு முன்னேற்றமளிக்கும் வேறொரு வழியை நாடி குடும்பத்துடன் முரண்கொள்கிறார் ஹரிலால்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டு ‘சுதந்திர தாகம்’ என்ற நாவலை எழுதினார். அதில் காந்தியடிகளைப்பற்றிய பல தகவல்களை, பாத்திரங்களுடைய உரையாடல்களின் வழியாக அறிந்துகொள்ளலாம். இப்போது, காந்தியடிகளையே ஒரு முக்கியமான கதைப்பாத்திரமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. சிறப்பான தமிழ் நாவல் வரிசையில் கலைச்செல்வியின் இந்நாவலுக்கும் இடமுண்டு.”
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.