அத்திமலைத் தேவன் (பாகம்-2)
₹600
- Author: காலச்சக்கரம் நரசிம்மா
- Category: வரலாற்று புனைகதை
- Sub Category: நாவல்
- Publisher: வானதி பதிப்பகம்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2020
- Binding: Hardcover
- Language: தமிழ்
Description
அத்திமலைத்தேவன் பலரையும் மலைப்பில் ஆழ்த்தி விட்டதை உணருகிறேன். சாணக்கியன் காஞ்சியில் தோன்றியவன் என்பதே பலருக்குத் தெரியவில்லை. சந்திரகுப்தன் ஒரு காட்டுவாசி என்பதும் பலரும் அறிந்திராத விஷயம். Incubator இல் இன்று குழந்தைகளை வைத்து உயிர் வாழ வைப்பது போன்று, சாணக்கியன் பிந்துசாரனை இயற்கை Incubator இல் வைத்துக் காப்பாற்றினான் என்பது பிரமிப்பினை ஏற்படுத்தும் விஷயம் என்று பலரும் கூறினார்கள். சாணக்கியன் பொக்கை வாயன். ஆனால் அவன் பற்களை இழந்த விதம் உருக்கத்தை ஏற்படுத்தியது என்று பலரும் தெரிவித்தனர். அத்திமரம், குறிப்பாக தேவ உடும்பர அத்திமரம் குறித்த தகவல்கள், பட்டுப்பூச்சி ஆருடம், என்று பல அறிய விஷயங்களை கற்றோம் என்று பலரும் கூறியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
துர்தரா, திஸ்ஸரக்கா ஆகியோரின் கதாபாத்திரங்களை கண்டு மலைத்துப் போனவர்களும் உண்டு. அசோகன் கலிங்கத்துப் போரில் புரிந்த கொடுமைகளைப் பற்றி இதுவரை நான் அறிந்ததே இல்லை என்று பலரும் சொன்னார்கள். உண்மை. சரித்திரம் என்பது ஒருவரின் குணங்களை நேர்மறையாகவே சித்திரிக்கும். அவரது எதிர் மறை குணங்களை ஒருபோதும் பிரதிபலிக்காது. எனவேதான், சுத்த சத்வமாக சித்திரிக்கப்பட்ட சரித்திர பாத்திரங்களின் உண்மையான குண நலன்களை எனது புதினங்களில் நான் எழுதும் போது பலரால் அதனை ஜீரணிக்க முடியவில்லை. அசோகன் மரம் நட்டார் என்று நமக்குக் கூறப்பட்டதே தவிர அவன் மனைவி மரத்தை வெட்டினாள் என்று யாரும் நமக்குக் கூறவில்லை .
அத்திமலைத்தேவனில் நான் குறிப்பிட்ட சம்பவங்கள் மிகவும் கொடூரமாக உள்ளதாக சில பெண் வாசகர்கள் குறிப்பிட்டனர். நான் குறிப்பிட்டிருந்த சம்பவங்கள் அனைத்துமே உண்மை நிகழ்வுகள். சந்திரகுப்தன், பிபத்த தேவன் இருவரில் யார் மவுரிய மன்னன் என்பதற்காக நடைபெற்ற போட்டியில், சந்திரகுப்தன் பிபத்தனின் தலையை வெட்டியெறிந்த பிறகே மன்னன் ஆனான் என்கிற குறிப்புகள் சரித்திரத்தில் இருந்தன. நந்தன் கொலை, துர்தரா கொலை அனைத்துமே சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள். கொலையை நான் சற்று எனது கற்பனை வர்ணனைகளுடன் விவரித்துள்ளேன். கொலைகள் நடந்தது உண்மை.
2018 இறுதியில் சிக்கிம் மாநிலத் தலைநகரில் காங்க்டாக் நகரில் உள்ள ரும்டேக் புத்த விகாரத்தில் உள்ள ஒரு புத்த பிக்குவைச் சந்தித்தேன். நான் முதல் பாகத்தில் குறிப்பிட்டிருந்த போதி மரம், அதனை திஸ்ஸரக்கா சிதைத்தது, உரக சூத்ரம், தாமரை சூத்ரம் மற்றும் அத்திமர பெருமைகள் ஆகியவற்றைப் பற்றி நான் கூற, மலைப்பின் உச்சத்தில் அவர் நின்றார். அவர் “இந்த விவரங்களை எல்லாம் இந்த காலத்தில் புத்த பிக்குகளே அறிவதில்லை. வெறும் மனம் குவிதல் மற்றும் தியான பயிற்சிகளைத்தான் போதிக்கின்றோமே தவிர, புத்த தத்துவ சரித்திரங்களை நாங்களே போதிப்பதில்லை” என்றார்.
நான் அத்திமலைத்தேவன் எழுதுவதற்காக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் போது, நான் எதிர் கொண்டிருந்த இன்னல்கள் அனைத்தும் அவரது பாராட்டினால் கதிரவனைக் கண்ட பனியாக மறைந்து போனது. அவரது புகழுரைகள் தந்த உத்வேகத்தில், சென்னை வந்தவுடன் இரண்டாவது பாகத்தை எழுதத் துவங்கினேன்.
கலைமகள் நிர்வாக ஆசிரியர் திரு கீழாம்பூர் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது புதினம் அத்திமலைத்தேவனை அலசுவதற்கு ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அழைத்து, எனது கருத்துகளையும் கூறுவதற்கு என்னை அழைத்தார்.
பலரும் தங்களது சந்தேகங்களை எழுப்பினர்.
ஜனவரி, 29 செவ்வாய்க்கிழமை ஆழ்வார் பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் TAG நிறுவன தலைவர் R.T. சாரி, திரு. ரவி தமிழ்வாணன், திரு. R.V.ராஜன் ஆகியோர் முன்னிலையில் திரு. சந்திரமோகன் என்னும் நாடக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் எனது நாவலை விமர்சித்திருந்தார். கிடைக்கப் போவது பூமாலையா அல்லது காமாலையா என்று யோசித்து நின்ற வேளையில் எனக்குப் பாமாலையே சூட்டிவிட்டனர். அவர்களை அத்திமலையான் மிகவும் பாதித்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். ஒரு வாசகர் என்னிடம் ரகசியமாக வந்து, இதே டெம்போவில் மற்ற பாகங்களும் இருக்கும் அல்லவா? என்றும் கேட்டார். அதற்கு அத்திமலையான் அருள் புரிவார் என்று நம்புகிறேன்.
இன்னும் ஒரு வாசகர், தங்களது பத்திரிகை வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டுப் புதினங்களை எழுதுங்கள் என்றார். எனது தாய் தந்தையருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த நிகழ்வு அமைந்தது எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.
முழு திருப்தியுடன் இதோ அடுத்த பாகத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
‘காலச்சக்கரம்’ நரசிம்மா.
Be the first to review “அத்திமலைத் தேவன் (பாகம்-2)” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.