படைப்பாளிகள்: முகமும் அகமும்

மூத்த பத்திரிகையாளர் சுகதேவ் 90-களின் இறுதியில் இலக்கிய ஆளுமைகளுடன் நிகழ்த்திய உரையாடல்கள், அப்போதைய நோபல், புக்கர் பரிசுகளைப் பெற்ற எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகங்கள் ஆகியவற்றின் தொகுப்பு இது. 2003-ல் மருதா பதிப்பக வெளியீடாக வெளிவந்த தொகுப்பின் மறுபதிப்பு. நாம் அறிந்த ஆளுமைகளின் அறியாத முகங்களையும் எடுத்துச்சொல்கின்றன இந்த உரையாடல்கள்.

தமிழ் சினிமாவைப் பற்றிய கார்த்திகேசு சிவத்தம்பியின் கறாரான விமர்சனங்கள்; மரபுத் தொடர்ச்சியற்ற ‘எழுத்து’ இயக்கம், உள்ளடக்கங்களை வரையறுத்த ‘வானம்பாடி’ இயக்கம் இரண்டையுமே ஏற்றுக்கொள்ளாத அப்துல் ரகுமானின் நிலைப்பாடு; இன்று கவிப்பேரரசாக வலம்வரும் வைரமுத்து 1998-ல் கவியரசு பட்டத்தைத் துறப்பதாகத் தனது பேட்டியில் கூறியிருப்பது என்று இந்த உரையாடல்கள் இலக்கிய வாசிப்புக்குள் அடியெடுத்துவைக்கும் இளைய தலைமுறைக்கு முன்னோடிகளின் ஆளுமைகளையும் அவதானிப்புகளையும் தொகுத்துணரும் நல்வாய்ப்பு.

அனைவரையும் பாராட்டுபவர்கள் என்று விமர்சிக்கப்பட்ட தி.க.சிவசங்கரனும் வல்லிக்கண்ணனும் ஜெயமோகனைக் குறித்துப் பேசும்போது மட்டும் தயக்கமின்றி விமர்சித்திருக்கிறார்கள். ஜெயமோகனின் விமர்சனங்கள் தன்னையே மையமாக வைத்தன என்றார் வல்லிக்கண்ணன். ‘விஷ்ணுபுர’த்தை மலையாளத்தில் மொழிபெயர்த்தால் யாரும் அதைப் பொருட்படுத்தவே மாட்டார்கள் என்கிறார் தி.க.சிவசங்கரன். கார்த்திகேசு சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, சித்ரலேகா மௌனகுரு என்று ஈழத்து எழுத்தாளுமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது இந்தத் தொகுப்பின் சிறப்பு.

1 Comment

  1. September 26, 2021 at 4:56 am

    user

    Nice Reading

Comments are closed.

HomeCategoriesWishlistAccount
Search